அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.பி. பெரியசாமியின் அண்ணன் அருணாச்சலம் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர், அதிமுகவில் இருந்து விலகி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளனர். இதற்கு முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் கே.கே. செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பெரியசாமியின் அண்ணன் அருணாச்சலம் தற்போது அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனுக்கு, அதிமுகவில் செல்வாக்கு கொண்ட முக்கிய நபர்களை தவெக பக்கம் இழுப்பதே முக்கிய பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனிடையே, வரும் 18ஆம் தேதி ஈரோட்டில் நடிகர் விஜய் தலைமையில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த செங்கோட்டையன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் அன்றைய தினம், விஜய்யே திக்குமுக்காடும் அளவுக்கு பெரும் திரளைச் சேர்க்க திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளில் அவர் முழு கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.