
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கோவிலாக இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ரவுடிகளை வைத்து தாக்குதல் நடத்திய ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளும் பேச்சுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக கூறினார். இதற்கு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் அதிமுக எந்த காலத்திலும் வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கத்தோடு செயல்படுகிறார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வது தான் அவருக்கு மரியாதை.
இல்லையெனில் அவமரியாதையை தான் சந்திப்பார். ஒற்றை தலைமை வந்தால் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறலாம் என்று ஆள் வைத்து பேசினார்கள். ஆனால் இதுவரை நடந்த ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை. அதிமுகவில் நான் மீண்டும் இணைய வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் அதிமுகவில் மீண்டும் பிரிந்த சக்திகள் அனைத்தும் கொண்டு சேர்ந்தால்தான் வெற்றி பெற முடியும் என்று தான் கூறினேன் என்றார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அவராகவே பொது செயலாளர் பதவியில் இருந்து விலகினால் மரியாதை என்று ஓபிஎஸ் எச்சரிக்கும் விதமாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.