விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அதிமுகவிற்கு ஆதரவாகவே தங்களின் பேச்சுகள் இருந்ததையும், அதை தவறாக புரிந்து, முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்வது வேதனையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

“அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என எச்சரித்தோம். அதில் எங்கள் நோக்கம் நல்லது தான். ஆனால் அதே கருத்தை, திமுகவால் விசிக விழுங்கப்படுவதாக எடப்பாடி கூறுகிறார். இது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “இந்த கருத்துகளை எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் என்று நம்ப முடியவில்லை. யாரோ சொல்லித்தருகிறதை அவர் பேசுகிறார் போல இருக்கிறது. அவர் கூறும் வார்த்தைகளால் அதிமுகவிற்கு எதிராக நாம் பேசுவதாக சிலர் நினைக்கலாம். ஆனால் அதிமுக தொண்டர்கள் நாங்கள் சொல்வது எதற்காக என்பதை நன்றாக புரிந்துகொள்வார்கள்” என்றும், “அவரது நிலைமைப் புரியும்போது, இந்த வகையான பேச்சுகளை அவர் சொல்லுவது ஏன் என்பதை உணர முடிகிறது” என்றும் தெரிவித்தார்.

மேலும், விசிக கட்சி குறித்து கூறிய விமர்சனங்களுக்கும் பதிலளித்த திருமாவளவன், “2021ம் ஆண்டு முதல், சில இடைத்தேர்தல்களை தவிர்த்து, அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணியில் விசிக பயணித்து வருகிறது. தற்போது ஒரு மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியாக மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்று வருகிறது. வீழ்ச்சி அல்ல, இது வளர்ச்சியே. இதை எடப்பாடி பழனிசாமி திரித்து பேசுவதற்கு என்ன காரணம் என்பது புரியவில்லை” எனக் கூறினார்.