தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் தமிழகம் இதுவரை இல்லாத புதுவிதமான செயல்களை சந்திக்கும் என்றும் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு திமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் இடையே மட்டும்தான் போட்டி என்றும் கூறினார். இது பற்றி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியும் இது பற்றி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, அவர் அவருடைய கருத்தை கூறியுள்ளார். விஜய் தன்னுடைய கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக தான் அப்படி பேசியுள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுமே தங்கள் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக அப்படித்தான் பேசுவார்கள். அதிமுகவை பிரதான எதிர்க்கட்சி என்று பொதுமக்கள் ஒப்புக்கொண்ட நிலையில் அதற்கான அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளனர் என்றார். அதன் பிறகு விஜய் அதிமுக கட்சியை விமர்சிக்காதது பற்றியும் அந்த கட்சியின் முன்னணி தலைவர்களை புகழ்ந்து பேசியது பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி, எங்கள் தலைவர்கள் அந்த மாதிரி நாட்டை ஆண்டுள்ளனர். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள், புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லோரும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா என்று கூறினார். மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் விஜய் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக தான் அப்படி பேசியதாக முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.