அதிமுக கூட்டணியில் இன்னும் ஓரிரு நாட்களில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது.

அப்போது தொண்டர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணி மிகவும் வலிமையாக இருப்பதாகவும், இன்னும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதால் தொண்டர்கள் நம்பிக்கையுடன் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் பாமக (அன்புமணி தரப்பு) ஏற்கனவே இணைந்துள்ள நிலையில், அடுத்ததாக இணையப்போகும் கட்சி எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தேமுதிக, பாமக (ராமதாஸ் தரப்பு), ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் தேர்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.