அதிமுகவினர் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வரும் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயல கிளப்பியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்களைச் சாடி திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி பேசியுள்ள பேச்சு சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. “அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மீது 4 வழக்குகளும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 3 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவர்களின் மீது படிந்துள்ள ஊழல் மற்றும் அரசியல் கறைகளைப் போக்கக்கூடிய ஒரு ‘வாஷிங் மிஷினாக’ தற்பொழுது விஜய் மாறி இருக்கிறார்” என்று மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

​மேலும், இவர்களின் கறையைத் துடைத்து சுத்தமாக்கித் தருவதே விஜய்யின் வேலை என்பது போலவும், அதற்காகவே இந்த மிஷினுக்கு ‘விஜய்’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்றும் ரகுபதி கிண்டலாகவும் ஆக்ரோஷமாகவும் பேசியுள்ளார். அதிமுகவிலிருந்து தவெக-வுக்கு தாவும் முக்கியப் புள்ளிகளின் பின்னணியில் உள்ள வழக்குகளைக் குறிப்பிட்டு திமுக இந்த அதிரடித் தாக்குதலை நடத்தியிருப்பது, சோஷியல் மீடியாவில் தவெக மற்றும் திமுக தொண்டர்களிடையே தற்பொழுது மிகப்பெரிய விவாதப் புயலையும் அரசியல் மோதலையும் உருவாக்கியுள்ளது.