
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் மீண்டும் அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவர் போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது சமீபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை புறக்கணித்தார். இந்த விவகாரம் தற்போது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இப்படியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், ஜெயலலிதாவை தவிர வேறு யாரும் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு உரிமை கோர முடியாது. அதிமுக விதிமுறைகளின் படி தொண்டர்களால் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கு 18 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் என்ற வகையில் விதியை மாற்றி விட்டார்கள். ராமநாதபுரத்தில் என்னை தோற்கடிப்பதற்காக ஆறு பன்னீர் செல்வங்களை களம் இறக்கினார்கள்.
கட்சி ஒன்றிணைந்தால்தான் ஜெயிக்க முடியும் என நான் மற்றும் சசிகலா உள்ளிட்டோர் கூறினோம். சசிகலா மற்றும் டிடிவி தினகரனிடம் இது குறித்து பேசி உள்ளேன். கட்சி ஒன்றிணைய எடப்பாடி பழனிச்சாமி ஒத்துவரவில்லை. கட்சியில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு உருவாக்கப்படும் என்றார்கள். அதற்கும் ஒப்புக் கொண்டேன். அதிமுக ஒன்றிணைய நான் எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டேன். கட்சி இணைய எவ்வளவு நான் விட்டுக் கொடுத்துள்ளேன். அதிமுக ஒன்றிணைந்தால் நான் உட்பட அனைவருக்கும் வாழ்வு இல்லை என்றால் அனைவருக்கும் தாழ்வு. இரட்டை இலையை முடக்கும் நிலையை உருவாக்கியவர்கள் அவர்கள் தான் என ஓபிஎஸ் பேசியுள்ளார்.