தலைமைச் செயலகத்தில் துறை வாரியான ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “தமிழ்நாட்டு வரலாற்றில் எந்த அரசு செய்யாத அளவிற்கு நாங்கள் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம்.

நிதிநெருக்கடிகள் இருந்தும், ஒன்றிய அரசின் இடையூறுகளையும் சமாளித்து சாதனைகள் பல செய்துள்ளோம். இத்தனை சாதனைகளையும் பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு பொறாமையாகி, தற்போது ‘தமிழகத்தை மீட்போம்’ என பயணத்தை தொடங்கியிருக்கிறார்,” எனக் கூறினார்.

அதிமுகவை மீட்க முடியாத எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டை மீட்க போகிறாராம். உங்களிடம் இருந்து தமிழ்நாடு எப்போதோ மீட்கப்பட்டு விட்டது என விமர்சித்த முதல்வர், “கூவத்தூர் கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் போன்ற விஷயங்களில் ஈடுபட்ட அதிமுக ஆட்சி தமிழ்நாட்டை அடகு வைப்பது போன்றது.

மேலும், பழனிசாமியின் கல்வி குறித்த விமர்சனங்களை முற்றிலும் பொய்யானது என கண்டித்த அவர், “எடப்பாடி பழனிச்சாமி வடிவேலு காமெடி போல வாய்க்கு வந்ததை பேசுகிறார். அறநிலையத்துறை சட்டப்படி கல்லூரி தொடங்க அனுமதி இருக்கிறது. கும்பகோணத்தில் கலைஞரின் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆனால் ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இது போன்றவற்றுக்கு எதிர்வினையுடன் செயல்படாமல், மொத்தமாக பாஜக கூட்டணிக்கே தமிழ்நாட்டின் உரிமைகளை துரோகம் செய்திருக்கிறீர்கள்.

கோவில் நிதியில் கல்லூரிகள் கூடாது என பாஜக தலைவர்கள் இங்கே பேசியது இல்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். கொடுத்த காசுக்கு மேல் கூவுதல் என்ற சினிமா வசனம் தான் நினைவுக்கு வருகிறது என்றார்.

“பழனிசாமி எதையும் செய்யாத தலைவர்; குரல் மட்டும் பாஜகவுக்காக கொடுப்பவர். கல்வி, மருத்துவம், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் நாம் சாதனைகள் படைத்துள்ளோம். தமிழ்நாட்டை வளர்ச்சிக்கு வழிவைத்து, கலைஞரின் கொள்கைகளை முன்னெடுத்துக் கொண்டு, திராவிட மாடலுக்கு உலக அளவில் புகழ் சேர்த்துள்ளோம். இதிலிருந்து மக்கள் ஒருபோதும் மாறமாட்டார்கள்” என்று கூறி உரையை முடித்தார்.