விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அதிமுக கட்சிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ள நிலையில் அந்தப் போராட்டத்தில் அதிமுக கலந்து கொள்ளுமா இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை. அதோடு தொல். திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அதனால் தான் அதிமுகவை அழைத்ததாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இருப்பினும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டும்தான் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் மற்றும் கூட்டணிக்கான அழைப்பு கிடையாது எனவும் அவர் விளக்கம் கொடுத்தார்.
இந்நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். அதாவது மது ஒழிப்பில் விஜய்க்கு உடன்பாடு இருக்கலாம். எனவே அவர் விருப்பப்பட்டால் கண்டிப்பாக மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என அடுத்தடுத்து முக்கிய கட்சிகளுக்கு திருமா அழைப்பு விடுத்து வரும் நிலையில் ஒருவேளை 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணிக்கான அடித்தளமாக இருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
