அ.தி.மு.க நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) தொடரவேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  கேட்டுக் கொண்டுள்ளார்.

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் நடத்தப்படும் சுற்றுப்பயணத்தை நேற்று காஞ்சிபுரத்தில் தொடங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அதையடுத்து பேசிய அவர் கூறியதாவது:  “நான், இ.பி.எஸ். ஆம்புலன்சில் செல்வார் எனக் கூறவில்லை. மனிதாபிமானம் உள்ள ஒருவராக அந்த வகையான பேச்சு என்னிடம் இருந்து வர வாய்ப்பில்லை. ஆனால், அ.தி.மு.க. கட்சி தற்போது ஆம்புலன்சில் செல்லும் நிலைக்கு சென்றுவிட்டதாகவே கூறினேன். கட்சி ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டபோது, அதை மீட்டெடுக்கும் மருத்துவராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருவார் என்பதே என் கருத்து. யார் கூட்டம் நடத்தினாலும், அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் இருப்பது சகஜமானதே.”

“இ.பி.எஸ்.-ஆல் பா.ஜ.க.விடமிருந்து அ.தி.மு.க.வை பாதுகாக்க முடியவில்லை. எனவே, அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக அவர்தான் தொடர வேண்டும். இது, தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய ஒரே நல்ல காரியம். அப்போதுதான், எங்கள் வேலை இன்னும் சுலபமாகி விடும். அ.தி.மு.க.வினர் இதை ஏற்கிறார்களா என்றுதான் தெரியவில்லை. ஆனால் நான் முழுமனதுடன் முன்மொழிகிறேன் – நீங்கள் (இ.பி.எஸ்.) தான் நிரந்தர பொதுச்செயலாளர்!” என்று  கூறினார்.