இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் ஏற்படும் குற்றங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய ரயில்வே தகவல் தொடர்பு மற்றும் மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டெல்லியில் நேற்று இரண்டு புதிய இணையதளங்களை தொடங்கி வைத்தார்.

அதில் டிஜிட்டல் இன்டெலிஜென்ஸ் பிளாட்பார்ம் என்ற இணையதளம் மூலமாக வங்கிகள் மற்றும் ஆன்லைன் மோசடி குறித்த விசாரணை செய்யும் அமைப்புகள், போன் பே போன்ற நிதி பரிவர்த்தனை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் அடையாள அட்டை வழங்கும் மாநிலங்கள் தங்களுக்கு கிடைக்கும் உளவு தகவல்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாது எனவும் இந்த நிறுவனங்கள் தங்களுக்கு இடையே தகவல்களை பகிர்ந்து கொள்ளும் விதமாக இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே சக்ஷு என்ற இணையதளத்தில் தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் மூலமாக நடைபெறும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் புகார்களை பதிவு செய்யும் சேவை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.