தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து இன்று பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்டோரை வீட்டிற்கு சென்று போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு தற்போது கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான ஆட்சியா? மதுபான கொள்முதல் ஊழல் மாஃபியாக்களுக்கான ஆட்சியா?

டாஸ்மாக் மதுபான ஊழலை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க பாஜகவினருக்கு தடை விதித்து தடுப்புக் காவலில் கைது செய்வது திராவிட மாடல் அரசு மக்களை விட மதுபான விற்பனைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. தமிழக காவல்துறையின் இந்த கைது நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மதுபான கொள்முதலில் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை சோதனையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக அரசின் மதுபான கொள்முதல் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்த தடை விதித்து தடுப்புக் காவலில் கைது செய்யும் ஊழல் திமுக அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பதிவிட்டுள்ளார்.