பொதுவாக தகவல் தொடர்பின் முதல் கட்டமாக ஆரம்ப காலகட்டங்களில் தபால்தான் இருந்தது. பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகத்தான் ஒருவர் மற்றொருவருக்கு செய்திகளை அனுப்பினர். தற்போது காலம் மாற மாற கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. தற்போது செல்போன் மூலமாக எந்த நாட்டில் இருப்பவர்களுடனும் பேச முடியும். இந்நிலையில் தற்போது கடலுக்கடியில் அமைந்துள்ள ஒரு தபால் பெட்டி பற்றிய சுவாரசிய தகவல்களை பார்க்கலாம். இந்த பெட்டிக்குள் கடிதத்தை போட வேண்டும் என்றால் கடலுக்குள் நீந்தி செல்ல வேண்டும். அதன் பிறகு தான் கடிதத்தை தபால் பெட்டியில் போட முடியும். இது எங்கு அமைந்துள்ளது என்று பார்க்கலாம்.

அதாவது இது ஜப்பான் நாட்டில் உள்ள சுசாமி பே என்ற இடத்தில், கடற்கரையில் இருந்து சுமார் 10 மீட்டர் ஆழத்தில் உள்ளது. இங்கு தண்ணீரில் நீந்தி சென்று தான் கடிதத்தை போட முடியும் என்பதால் தண்ணீரில் நனையாத தபால் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அட்டையில் ஆயில் பெயிட் மூலம் எழுதி அதில் போட வேண்டும். அதன் பிறகு அங்கு பணிபுரிபவர்கள் உங்கள் கடிதத்தை எடுத்து நீங்கள் குறிப்பிட்ட முகவரியில் கொண்டு சேர்ப்பார்கள். இந்த தபால் பெட்டியை அங்கீகரிக்கும் விதமாக கடந்த 2002 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த தபால் பெட்டியானது சுற்றுலா பயணிகளுக்கு சாகச பயணமாக வரவேற்பை பெற்ற நிலையில், இதற்கான பிரத்தியேக தபால் அட்டை மற்றும் ஆயில் பெயிட் மூலம் வணிக ரீதியாகவும் சிறந்து விளங்குகிறது. மேலும் இதில் ஒரு நாளைக்கு சுமார் 1000 முதல் 1500 தபால் அட்டைகள் வரை போடப்படுவதாக கூறப்படும் நிலையில், இதற்கு சிறப்பான வரவேற்பும் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.