தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கிறது. இந்த படம் கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெறும் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்கலான் திரைப்படத்திற்காக நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி நடிகர் விக்ரம் 28 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுள்ளார்.