
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீஜா நந்தகுமார் என்ற இந்திய பெண்ணுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அவருக்கு தெரியாமலே, அவரது கணவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு ரூ. 35 லட்சம் மதிப்புள்ள பரிசு விழுந்திருப்பது பெரும் சுவாரசியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அபுதாபியில் 2002ம் ஆண்டு முதல் வாழ்ந்து வருகிற ஸ்ரீஜா, வாராந்திர லாட்டரி குலுக்கல்களில் தனது கணவர் டிக்கெட் வாங்கி வருவது குறித்து தெரியாமலேயே இருந்துள்ளார். சமீபத்தில், “Big Ticket” எனப்படும் லாட்டரி போட்டியில் (054565) என்ற எண்ணுடன் கொண்ட டிக்கெட்டிற்கு பரிசு விழுந்ததாக தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது.
தொலைபேசியில் ரிச்சர்டு என்ற நபர், “உங்கள் பெயரில் பரிசு விழுந்துள்ளது” என கூறும்போது, முதலில் அதனை நம்ப முடியாமல், “நீங்கள் கலாய்க்கிறீர்களா?” என சந்தேகத்துடன் பதிலளித்துள்ளார் ஸ்ரீஜா. பின்னர், தனது கணவரிடம் கேட்டபோது தான் உண்மை தெரியவந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
“முதலில் நம்பவே இல்லை. யாராவது ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் பின்னர் உண்மையென உறுதிப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். நாங்கள் பத்தாண்டுகளாக லாட்டரி வாங்குகிறோம். இப்போது தான் அதிர்ஷ்டம் வந்து சேர்ந்திருக்கிறது” என்று ஸ்ரீஜா கூறினார்.
இந்நிலையில், கிடைத்துள்ள ரூ.35 லட்சம் பரிசு தொகையை எப்படி பயன்படுத்தலாம் என்பதை குறித்து இப்போதுவரை முடிவெடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இது போன்றதொரு சம்பவம் கடந்த மாதமும் இடம்பெற்றது.
சென்னையைச் சேர்ந்த ஒருவர் ₹230 கோடி பரிசு தொகையை லாட்டரி மூலம் வென்றிருந்தார். தற்போது, ஸ்ரீஜாவின் குடும்பமும் அதிர்ஷ்டத்தின் பக்கம் திரும்பியுள்ளனர்.இது போன்ற சம்பவங்கள், எப்போதாவது ஒரு நாள் அதிர்ஷ்டம் நம்மையும் தேடி வரும் என்பதற்கான நம்பிக்கையையும் மக்களிடையே தூண்டுகின்றன.