உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உணவக ஊழியர் ஒருவர் பீட்சாவில் எச்சில் துப்பி அதனை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ததாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டா செக்டார் 22-இல் உள்ள சௌடா கிராமத்தில் ‘பீட்சா ஹன்ட்’ (Pizza Hunt) என்ற பெயரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் பணியாற்றும் நபர் ஒருவர், பீட்சாவை தயாரிக்கும்போது அதில் எச்சில் துப்புவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிகளைத் துளியும் மதிக்காமல், மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடும் இத்தகைய செயல்கள் சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறையினரும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த உணவகத்தின் உரிமம் மற்றும் சுகாதார நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.