சமூக வலைதளங்களில் புகழ்பெற்றாக வேண்டும் என்ற நோக்கில், பொது இடங்களில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் செய்யும் ‘பிராங்க்’ (Prank) எனப்படும் குறும்புச் செயல்கள் வரம்பு மீறி வருகின்றன. அந்த வகையில், மதுரா ரயில் நிலையத்தில் பொம்மை பாம்பை வைத்து இளைஞர் ஒருவர் செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் ஒரு மெல்லிய நூலில் பொம்மை பாம்பு ஒன்றைக் கட்டி, அதனைத் தரையில் இழுத்தபடி நடைமேடையில் நடந்து சென்றுள்ளார். தூரத்திலிருந்து பார்ப்பதற்கு அது நிஜப் பாம்பு ஊர்ந்து வருவது போலவே தோன்றியுள்ளது.
This viral “snake prank” video is reportedly from Mathura Railway Station where a youth was seen dragging a snake-like object tied to a rope behind him, creating panic among passengers. Chaos broke out as people rushed in fear, leading to unnecessary disruption and risk.
Such… pic.twitter.com/0CWvRhsCcX— The Nalanda Index (@Nalanda_index) March 24, 2026
திடீரென காலடியில் பாம்பு வருவதைக் கண்ட பயணிகள், அது நிஜப் பாம்பு என நினைத்து அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் ரயில் நிலைய நடைமேடையில் திடீர் பரபரப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இந்தப் பதற்றத்தால் கடும் அவதிக்குள்ளாகினர். சிறிது நேரத்திற்குப் பிறகே அது ஒரு பொம்மைப் பாம்பு என்பதும், அந்த இளைஞர் வீடியோ எடுப்பதற்காக இவ்வாறு செய்ததும் தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் குறித்த வீடியோ ‘எக்ஸ்’ (X) தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த இளைஞரின் பொறுப்பற்ற செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “ரயில் நிலையம் போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் இத்தகைய செயல்கள் பெரிய அளவிலான கூட்ட நெரிசலுக்கும் விபத்துகளுக்கும் வழிவகுக்கும்” என்று இணையதளவாசிகள் எச்சரித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது ரயில்வே காவல்துறையும், ரயில்வே அமைச்சகமும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
