தெலுங்கானா மாநிலம் ராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சைலம். இவருக்கும் ஸ்ராவணி என்பவருக்கும் ராங் கால் மூலம் செல்போனில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஸ்ராவணிக்கு தனது அக்கா கணவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதால் கணவரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு அவருடன் சென்று விட்டார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மீண்டும் திரும்பி வந்த மனைவியை சைலம் ஏற்றுக்கொண்டார். பின்னர் மன உளைச்சலுக்கு ஆளான சைலம் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ஸ்ராவணி செல்போனில் அடிக்கடி யாரிடமோ பேசுவதை அறிந்த சைலம் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் இளம்பெண் தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த 21-ஆம் தேதி சைலம் தனது மனைவியை சமாதானப்படுத்தி பைக்கில் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர் சாதாபூர் அருகே சென்றபோது சீதாப்பழங்கள் சேகரித்து வரலாம் என கூறி வனப்பகுதிக்கு மனைவியை அழைத்துச் சென்று கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கத்தியால் வயிற்றில் குத்தி கொலை செய்தார்.

பின்னர் மனைவியின் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சைலம் தனது மனைவியை கொலை செய்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்த போது உண்மையை ஒப்புக்கொண்டார். இதனால் சைலத்தை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.