கர்நாடக மாநிலம் செங்காவி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி தேவம்மா (வயது 50). இவருக்குத் திருமணமாகி கணவர் இருந்தபோதிலும், குடும்பத் தகராறு காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகக் கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்தச் சூழலில், ஆழ்துளை கிணறு தோண்டும் தொழிலாளியான நாகராஜ் (55) என்பவரோடு இவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறி, இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், லட்சுமி தேவம்மாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவருடன் திடீரென்று தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாகராஜை விடுத்து அந்த இளைய வாலிபருடன் அவர் பழகத் தொடங்கிய விஷயம் நாகராஜின் காதுக்கு எட்டியது. ஆத்திரமடைந்த நாகராஜ் இதைக் கண்டித்தும், லட்சுமி தேவம்மா அதனைப் பொருட்படுத்தாமல் தனது புதிய காதலுடனான பழக்கத்தைத் தொடர்ந்துள்ளார்.

இதற்கிடையே, ஆத்திரம் அடங்காத நாகராஜ், லட்சுமி தேவம்மாவைத் தான் வேலை செய்யும் ஆழ்துளை கிணறு தோண்டும் தோட்டத்திற்கு வருமாறு ரகசியமாக அழைத்துளார். அங்கு சென்ற அவரிடம் நாகராஜ் வழக்கம்போல உல்லாசம் அனுபவித்துள்ளார். அதன் பிறகு, அந்த 29 வயது வாலிபர் யார் என்று கேட்டு மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் தலைக்கேறிய நாகராஜ் அருகில் கிடந்த உருட்டுக் கட்டையால் லட்சுமி தேவம்மாவின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்துயிரிழந்தார். தனது காதலியின் மரணத்தை மறைக்க முயன்ற நாகராஜ், அவரது உடலைத் தோட்டத்தின் மறைவான பகுதிக்கு இழுத்துச் சென்று தீ வைத்து எரித்துள்ளார்.

மறுநாள் காலையில் தோட்டத்திற்கு வந்த உரிமையாளர், பாதி எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போய் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், கள்ளக்காதலன் நாகராஜை அதிரடியாகக் கைது செய்தனர். கள்ளக்காதலில் ஏற்பட்ட மோதல் காரணமாகப் பெண் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.