பாகிஸ்தான் நேஷனல் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஷாநவாஸ் தஹானி மற்றும் ஹசன் அலி இடையிலான சுவாரஸ்யமான சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முல்தானில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் வைட்ஸ் அணி, பாகிஸ்தான் ப்ளூஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் தஹானி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

முன்னதாக, பாகிஸ்தான் ப்ளூஸ் அணிக்காக பந்துவீசிய ஹசன் அலி, தஹானியை ஆட்டமிழக்கச் செய்திருந்தார். அப்போது தஹானி வழக்கமாகச் செய்யும் கொண்டாட்டத்தைப் போலவே ஹசன் அலியும் செய்து அவரை கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், போட்டியின் அடுத்த கட்டத்தில் தஹானிக்கு பதிலடி கொடுக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

 

இறுதிக்கட்டத்தில் பாகிஸ்தான் ப்ளூஸ் அணிக்கு வெற்றிபெற 3 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹசன் அலி களத்தில் இருந்தார். அப்போது தஹானி வீசிய பந்தை ஹசன் அலியால் சரியாக அடிக்க முடியவில்லை. பந்து மேலே எழுந்த நிலையில், விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் கேட்ச் பிடித்து ஹசன் அலியை ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் பாகிஸ்தான் வைட்ஸ் அணியின் வெற்றி உறுதியானது.

விக்கெட் கிடைத்ததும் தஹானி மைதானத்தைச் சுற்றி ஓடி தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். ஹசன் அலி முன்பு செய்த கொண்டாட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தஹானியின் இந்த ரியாக்ஷன் அமைந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். போட்டியின் பரபரப்பான முடிவுடன், இரு வீரர்களின் இந்த வேடிக்கையான தருணமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.