ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இதுவரை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோத இருக்கிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை போட்டியில் அவர் சிறப்பான முறையில் விளையாடி விமர்சனங்களுக்கு எல்லாம் தன் விளையாட்டால் பதிலடி கொடுத்து வருகிறார்.

நடப்பு தொடரில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா வங்காளதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் மோதியபோது  அரைசதம் விளாசி அசத்தினார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை முன்னாள் பாகிஸ்தான் ஆல் ரவுண்டரானா அப்துல் ரசாக்குடன் ஒப்பிட்டு அம்பத்தி ராயுடு பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, முன்னாள் பாகிஸ்தான் ஆல் ரவுண்டரான அப்துல் ரசாக்கை ஹர்திக் பாண்டியா நினைவுபடுத்துகிறார். அவரைப் போன்று பாண்டியா சிறப்பான முறையில் பந்து வீசுகிறார். அவர் பின் வரிசையில் களமிறங்கி எப்படி அதிரடியாக விளையாடுவாரோ அதே போன்று தற்போது பாண்டியா விளையாடி வருகிறார். மேலும் அவரைப் போன்று பந்துவீச்சு வேகத்திலும் பாண்டியா மாற்றம் செய்து சிறப்பாக விளையாடி வருகிறார் என்று கூறினார்.