இந்தியாவில் கோடைக் காலமானது தீவிரமடைந்து வரும் நிலையில், நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்திரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம் உட்பட பல மாநிலங்களில் வெப்ப காற்று வீசி வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் வெப்பநிலை அதிகரிக்கும் மாநில அரசுகளுக்கு உதவ பேரிடர் மேலாண்மை மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள் கொண்ட குழு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். “ஹீட் ஸ்ட்ரோக்” காரணமாக ஏற்படும் உயிரிழப்பை தடுக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.