
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஒச்சந்தட்டு கிராமத்தில் பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் ஆண்டிச்சியூரணி பகுதியில் இயங்கி வரும் ஒரு பெண்கள் விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு விடுதியில் உள்ள மாணவிகள் சாப்பிட்டுவிட்டு தூங்குவதற்காக சென்ற நிலையில் அதிகாலையில் விடுதி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு வேப்பமரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
இதனை பார்த்து விடுதி காப்பாளர் மற்றும் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் காளையார் கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தகவல் தெரிந்ததும் மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் அரசு மருத்துவமனையின் முன்பு திரண்டனர். மாணவி எப்படி வேப்பமரத்தின் மீது ஏறி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முடியும் என்று உறவினர்களும் பெற்றோரும் கேள்வி எழுப்பிய நிலையில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நீடித்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.