தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது மணிப்பூர் கலவரம் பற்றி பேசினார். அதாவது மணிப்பூரில் பெரிய கலவரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதனை பாஜக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக விமர்சித்திருந்தார். இதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதை விஜய் முதலில் தெரிந்து கொண்டு பேச வேண்டும். முதலில் பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு பேச வேண்டும்.

மணிப்பூர் பற்றி பேசுபவர்களை அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக நேரடியாக அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறேன். மணிப்பூரில் நடைபெறும் பழங்குடியினர் பிரச்சினைகள் என்பது மியான்மரில் இருந்து வந்த ஊடுருவல். இதைப் பற்றியும் போதைப் பொருள் கலாச்சாரத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் போது பெண்கள் நிர்வாணமாக போராட வேண்டிய நிலை இருந்தது. அப்படிப்பட்ட மோசமான சூழல் இருந்த நிலையில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு திரிபுரா, மணிப்பூர், அசாம், நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறப்பு ஆயுதச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்திற்கு எதிராக  எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைவிட பாஜக ஆட்சியில் அதிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண பாஜக விரும்பவில்லை. இந்த பிரச்சனைக்கு சுமுகமான முறையில் பேசியே தீர்வு காண விரும்புகிறது. ஆக்கபூர்வமான ஜனநாயக முறையில் மணிப்பூர் பிரச்சனை பேசி தீர்க்கப்படும் என்றார். மணிப்பூர் விவகாரத்தில் விஜய் பொது அறிவை வளர்த்துக்கொண்டு பேச வேண்டும் என்று அண்ணாமலை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.