சென்னையில் டிசம்பர் 6-ம் தேதி நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை தற்போது வன்னி அரசு கூறியுள்ளார். திமுக அழுத்தம் கொடுத்ததால் தான் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் விஜயை சரமாரியாக விமர்சித்ததோடு திமுக அழுத்தம் கொடுக்கவில்லை என்று விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,
திருமாவளவன் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என்று கூறவில்லை. சமரச பாயாசம் செய்கிறவர் உடன் மேடையை பகிர்ந்து கொள்ள முடியாது என்ற ஒரே ஒரு காரணத்தினால் மட்டும்தான் அவர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை. நூல் வெளியீட்டு விழா நடத்துபவர்கள் கூட திருமாவளவன் வேண்டாம் பாயாசம் கிண்டுகிறவர்கள் தான் வேண்டுமென்று போய்விட்டார்கள். தேவையில்லாமல் நூல் வெளியீட்டு விழாவை திருமாவளவன் புறக்கணித்து விட்டார் என்ற பொய் பிரச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது.
யாரும் திருமாவளவனை பின் நின்று வழி நடத்தவில்லை. திமுக கொடுத்த அழுத்தத்தினால் தான் திருமாவளவன் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. திருமாவளவனை இழுத்த இழுப்புக்கெல்லாம் கொண்டு செல்ல சில தரகர்கள் முயற்சி செய்கிறார்கள். தமிழ்நாட்டில் சனாதன கும்பலை திணற வைக்கும் திருமாவளவனை யாராலும் பின்னால் நின்று இயக்க முடியாது.
கடந்த 2001 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் திருமாவளவன் எம்எல்ஏ ஆன நிலையில் கொள்கைக்காக 2003 ஆம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார். திருமாவளவன் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற பொய் பிரச்சாரத்தை ஊக்குவிப்பது அம்பேத்கரையே அவமதிப்பது போன்றது. மேலும் எங்கள் தலைவரும் அம்பேத்கரும் நெருப்பு போன்றவர்கள். அவர்களை யாராலும் பொட்டலம் கட்ட முடியாது என்று கூறினார்.