கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் மீட்பு பணியும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு எதிரொலியால் தமிழகத்தின் மலை மாவட்டங்களான திண்டுக்கல், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களை கண்காணித்து மழை நாட்களில் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.