வேலூரைச் சேர்ந்த அமுதா (29) என்ற இளம்பெண், ஏற்கனவே 7 குழந்தைகளுக்கு தாயாக உள்ள நிலையில், தற்போது 8வது முறையாக கர்ப்பமாகியுள்ளார். 2 பிள்ளைகள் ஏற்கனவே இறந்து விட்டனர். குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக, 100 நாள் வேலைக்குச் சென்று தனது 5 குழந்தைகளையும் கவனித்து வந்த அமுதா, அருகில் உள்ள மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்தார்.

இதனையடுத்து, வேலூர் காக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அமுதாவை பிரசவத்திற்கு பின் குடும்ப கட்டுப்பாட்டிற்கு உட்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். ஆனால், குடும்ப கட்டுப்பாட்டிற்கு இணங்க விருப்பம் இல்லாத அவர் மற்றும் அவரது கணவர், மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறி வீட்டிற்கு சென்றனர்.

பிரசவ வார்டில் அமுதா இல்லாததை கவனித்த மருத்துவர்கள், உடனடியாக மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதார குழுவினர் கிராமத்துக்கு சென்று, அமுதாவை 108 ஆம்புலன்ஸில் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

சமூகத்தின் பொருளாதார நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இனி தங்கள் குடும்பத்திற்கு தேவையான தேவைகளை கருத்தில் கொண்டு குடும்ப கட்டுப்பாட்டில் பங்கெடுக்க வேண்டும் என்பதில் தம்பதியருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.