சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சேர்ந்த ஏராளமான மக்கள் தினமும் அலுவலகம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னை மாநகருக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் தினமும் தலைநகருக்கு வந்து வீடு திரும்புவதற்கு பயன்படும் போக்குவரத்தில் புறநகர் ரயில்கள் முக்கிய இடம் பெற்று வருகிறது. இதில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது பயண கட்டணம் குறைவு போன்ற காரணங்களால் பொது போக்குவரத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் முதல் சாய்ஸாக புறநகர் மின்சார ரயில்கள் திகழ்கிறது.

அந்த வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி போன்ற வழித்தடங்களிலும் தினமும் 500 முறை புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. தினமும் இவ்வளவு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும் கூட்ட நெரிசல் குறைவதில்லை. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் வசதிக்காக சென்னை புறநகர் ரயில்கள் அனைத்தும் விரைவில் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களாக மாற்றப்பட இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் 60 சதவீதம் வரையான ரயில்கள் 12 பெட்டிகளுடனும், 40 சதவீத ரயில்கள் ஒன்பது பெட்டிகளிடனும் இயக்கப்படுகிறது. இந்த 40 சதவீத ரயில்களையும் 12 பெட்டிகளுடன் இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக இந்த வழித்தடங்களில் உள்ள நடைமேடைகளை விரிவாக்கம் செய்யும் பணி நிறைவடைந்துள்ளது. படிப்படியாக இந்த வருட இறுதிக்குள் இந்த வழித்தடங்களில் அனைத்து ரயில்களும் 12 பெட்டிகளும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.