ஐபிஎல் 17-வது சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ரோகித் சர்மா மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில் நடப்பு தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு மும்பை அணியின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக அவர் இந்தியாவின் எந்த மைதானத்தில் விளையாடினாலும் மைதானத்திலேயே ரசிகர்கள் அவருக்கு எதிரான கோஷத்தை எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்து முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஹர்திக் பாண்டியா ரசிகர்களின் கருத்துகளால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். என்னைப் பொருத்தவரை ரசிகர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு நல்ல வீரர் ஹர்திக் பாண்டியா. அவர் எந்த அணிக்காக விளையாடினாலும் உயிரைக் கொடுத்து சிறப்பான முறையில் விளையாடுவார். அவரை தற்போது ரசிகர்கள் கிண்டல் செய்வது சரியில்லை. இதனால் அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். என்னால் ரசிகர்களின் எமோஷனலை புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் ஒரு தனிப்பட்ட நபரின் மீது இவ்வளவு வெறுப்பை காட்டக்கூடாது. மேலும் தற்போது மனரீதியான பிரச்சனையில் ஹர்திக் பாண்டியா இருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.