பெங்களூரைச் சேர்ந்த 29 வயதான ரோஹித் என்ற ஐடி ஊழியர், இந்தியாவில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, யாருக்கும் தெரியாமல் அமெரிக்க நிறுவனத்திலும் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார்.

இதன் மூலம் அவருக்கு மாதம் 7 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. சமீபத்தில் அப்பா ஆன ரோஹித், குடும்பத்தின் ஆசைக்காக ஒரு புத்தம் புதிய காரையும், 85 லட்சம் ரூபாய்க்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பையும் வாங்கியுள்ளார். இதனால் அவருக்கு மாதாமாதம் EMI மற்றும் இதர செலவுகளாக 1.4 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது.

இதனால் மியூச்சுவல் ஃபண்ட், பங்குகள் மற்றும் FD என ஏற்கனவே 82 லட்சம் ரூபாய் சேமிப்பு அவரிடம் இருந்தாலும், அவரது மனதிற்குள் ஏதோ ஒரு பயம் எப்போதுமே ஓடிக்கொண்டிருக்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் எப்போது வேலை பறிபோகுமோ என்ற பதைபதைப்பில்தான் அவர் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகிறார்.

மேலும் பணம் கொட்டோ கொட்டென கொட்டினாலும், அவரது வாழ்க்கையில் சந்தோஷம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. தினமும் 16 மணி நேரம் உழைத்து ஓடாய் தேயும் ரோஹித், தன் குடும்பத்தினருடனோ, நண்பர்களுடனோ நேரம் செலவழிக்க முடியாமல் தனிமையில் வாடுகிறார்.

இந்நிலையில் “ஏன் இந்த நரக வாழ்க்கை? வேலையை விட்டுவிடலாமே?” என்று கேட்டால், “இன்னும் 5 அல்லது 6 வருடங்களில் எப்படியாவது 7 முதல் 8 கோடி ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டும்! அதன் பிறகு, இந்திய வேலையை உதறித்தள்ளிவிட்டு, அமெரிக்க வேலையை மட்டும் வைத்துக்கொண்டு செட்டில் ஆகிவிட வேண்டும்,” என ஒரு மிகப்பெரிய இலக்கோடு ஓடிக்கொண்டிருக்கிறார் இந்த ஐடி இளைஞர்.