மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் உள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை ஒன்று திடீரென நுழைந்தது. அப்போது அந்தப் பகுதியில் உணவு வழங்குவதற்காக டெலிவரி ஊழியர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். புதர்களுக்குள் மறைந்திருந்த அந்த சிறுத்தை, எதிர்பாராத விதமாக மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து அவரைத் தாக்க முயன்றது. இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த அந்த ஊழியர் தனது பைக்குடன் கீழே விழுந்தார். எனினும், அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சாதுரியமாக செயல்பட்ட அவர், உடனடியாக தனது பைக் மற்றும் பார்சல்களை அங்கேயே போட்டுவிட்டு உயிர் பிழைப்பதற்காக அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனால் அவர் நல்வாய்ப்பாக எந்தவித காயமுமின்றி மயிரிழையில் உயிர் தப்பினார்.
View this post on Instagram
டெலிவரி ஊழியர் தப்பி ஓடியதைத் தொடர்ந்து, அந்த சிறுத்தை அருகிலிருந்த ஒரு வீட்டின் குளியலறைக்குள் நுழைந்து ஒளிந்து கொண்டது. குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த முழு சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினரும் போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குளியலறையில் இருந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பாதுகாப்பாகப் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால், சிறுத்தை அங்கிருந்து தப்பித்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதாகக் கருதப்படுகிறது. சிறுத்தை இன்னும் பிடிபடாததால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரத்தில் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் பலத்த எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
