மதுரை நாகமலை புதுக்கோட்டையில் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமை தாங்கினார். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் எடப்பாடி பழனிச்சாமி மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராஜன் செல்லப்பா ஒரு கோடி பேருக்கு என்ன மருத்துவம் பார்த்தார்கள் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தற்போது நடைபெற்ற கூட்டத்தில் கூட செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் என யாருமே வரவில்லை என்று தான் மக்கள் கூறுகிறார்கள். ஒரு கோடி பேரின் பட்டியல் என்பது வாக்காளர் பட்டியல் மட்டுமே. அது பொய்யான பட்டியல். எடப்பாடி கூறுவது தான் உண்மை. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சொன்னது உண்மைக்கு புறம்பானது என்று கூறினார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவதால் கூட்டணியில் இருப்பவர்களிடம் சுமுகமான முறையில் பேசி கட்சி தலைமை இது தொடர்பாக நல்ல முடிவை எடுக்கும் என்று தெரிவித்தார்.