சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன்படி ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,000 ஆகியவை ரேஷன் கடைகளின் மூலமாக வழங்க  தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற தற்போது முதல் 8-ந் தேதி வரை டோக்கன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து வருகிற            9-ஆம்  தேதியன்று முதல் – அமைச்சர் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதை தொடங்கி வைத்து அன்றைய நாளில்  அனைத்து கடைகளிலும், டோக்கன்களில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தின்படி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

மேலும், கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக, அந்தந்த ரேஷன் கடைகளில் பகுதி வாரியாக டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் அதற்கான விவரப்பட்டியல் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து  பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை வினியோகம் குறித்த புகார்களுக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என வெளியிடப்பட்டுள்ளது.