திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் லோகேஷ் கனகராஜின் LCU வரிசையில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதம் காரணமாக, அப்படத்தில் வில்லனாக நடிக்கும் மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி கடும் மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் ஆளாகியுள்ளார்.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்காகத் தனது தாடி வைத்த ‘லுக்’கைத் தொடர வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்ட நிவின் பாலி, படப்பிடிப்புத் தேதிகள் தொடர்ச்சியாகத் தள்ளிப்போவதால் தனது அடுத்தடுத்த படங்களில் அதே தோற்றத்துடன் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் இதுகுறித்துப் பேசிய நிவின் பாலி, “பென்ஸ் படத்திற்காகத் தாடியுடன் கூடிய தோற்றத்தை வைத்திருக்க ஒப்புக்கொண்டேன்; ஆனால் படப்பிடிப்புத் தேதிகள் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கின்றன. இதுகுறித்து அப்படிக் குழுவினரைத் தொடர்புகொண்டு கேட்க போன் செய்தால், அவர்களிடம் இருந்து எந்தவித பதிலும் வருவதில்லை.
போன் அடித்துக் கேட்டு கேட்டு எனக்கு ரொம்பவே அலுத்துப் போய்விட்டது” என்று மிகவும் வெளிப்படையாகவும் விரக்தியுடனும் தெரிவித்துள்ளார். மேலும், “இந்த பேட்டியையாவது பார்த்தாவது பென்ஸ் படக்குழுவினர் ஒரு நல்ல முடிவெடுத்து, எஞ்சியுள்ள 30 முதல் 35 நாட்களுக்கான படப்பிடிப்பை விரைவாக முடிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றும் அவர் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நிவின் பாலிக்கு, தயாரிப்பு தரப்பில் இருந்து முறையான பதில் அளிக்கப்படாமல் படப்பிடிப்பு தாமதப்படுத்தப்படுவது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தனது புதிய மலையாளப் படங்களுக்குத் தோற்றத்தை மாற்ற முடியாமல், ‘பென்ஸ்’ படத்திற்காக அதே தாடி கெட்டப்பைப் பராமரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிவின் பாலியின் இந்த ஆதங்கப் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் மற்றும் பாக்கியராஜ் கண்ணன் தலைமையிலான படக்குழுவினர் உடனடியாகத் தலையிட்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
