உத்திர பிரதேச மாநிலத்தில் ஹமிர்பூர் என்ற பகுதியில் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி பிறந்து 7 நாட்கள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தையை பெற்றோர் கீழே தூக்கி வீசிவிட்டனர். அந்தக் குழந்தை பாலத்தின் கீழே உள்ள ஒரு மரத்தில் சிக்கி தவித்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ,மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், உடலில் 50க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேல் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.

தற்போது தான் குழந்தை பரிபூரணமாக குணமாகி நலமாக இருக்கிறது. அந்தக் குழந்தை ஜென்மாஷ்டமி அன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக கிருஷ்ணா என்ற பெயர் சூட்டியுள்ளனர். இந்த குழந்தை பரிபூரணமாக குணமடைந்ததால் கடந்த 24 ஆம் தேதி குழந்தையை உறவினர்களிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அந்த மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் பேசுகையில் குழந்தை வேண்டாம் என்றால் மருத்துவமனையிலோ அல்லது மசூதியில் அல்லது கோவிலிலோ விட்டு சென்றிருக்கலாம். அதை விட்டுவிட்டு இப்படி பாலத்தில் இருந்து தூக்கி வீசி விட்டார்கள் என்று வேதனையுடன் கூறினார். மேலும் அந்த குழந்தையை பிரியும்போது அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட அனைவரும் கண்ணீர் வடித்தனர்.