ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு தாலிபன்கள் ஆட்சி அமைத்தனர் ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து தாலிபான்கள் பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்க, வேலைக்கு செல்ல தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணை இல்லாமல் செல்ல தடை என அடுத்தடுத்த உத்தரவுகளை பிறப்பித்தனர். இந்த நிலையில் பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்வதோ, மற்ற பெண்களின் முன் குர்ஆனை ஓதுவதோ கூடாது என அதிரடியாக தடை விதித்துள்ளனர்.
இது குறித்து நல்லொழுக்கத் துறை மந்திரி காலித் ஹனாபி கூறியதாவது, ஒரு வளர்ந்த பெண் குர்ஆனின் வாசகங்களை ஓதுவது மற்றொரு வளர்ந்த பெண்ணின் முன் சத்தமாக பிரார்த்தனை செய்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அல்லாஹு அக்பர் கோஷம் எழுப்ப அனுமதி இல்லை. இஸ்லாமின் நம்பிக்கை வார்த்தைகளை உச்சரிக்கவே கூடாது. தொழுகைக்கான அழைப்பு விடுக்க பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆகவே அவர்கள் பாடல் பாடுவதற்கும் அனுமதி இல்லை எனக் கூறியுள்ளார்.