ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், வாகனத்திற்கு சி.என்.ஜி. எரிபொருள் நிரப்பும்போது ஏற்பட்ட கோர விபத்தில், 24 வயது ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.கே. ஜெயின் பாரத் பெட்ரோலியம்  பெட்ரோல் பங்க்கில் துஷார் கம்ரி என்ற 24 வயது இளைஞர் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி இரவு சுமார் 10:40 மணியளவில், பங்க்கிற்கு வந்த வாகனம் ஒன்றிற்கு அவர் சி.என்.ஜி. எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக எரிபொருள் நிரப்பும் குழாய் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட பலத்த சத்தத்துடன் கூடிய வாயு கசிவு காரணமாக பெட்ரோல் பங்க்கில் உடனடியாகப் பெரும் பீதி ஏற்பட்டது. என்ன நடக்கிறது என்று அறியாமல் பயந்துபோன வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் தாங்கள் வந்த வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டுத் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

இந்த விபத்தின்போது, வெடித்துச் சிதறிய சி.என்.ஜி. குழாயின் உலோக முடன் பறந்து வந்து துஷார் கம்ரியின் தலையில் பலமாகத் தாக்கியது. இதில் நிலைதடுமாறித் கீழே விழுந்த அவருக்குத் தலையில் தீவிர காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை சக ஊழியர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி துஷார் கம்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெட்ரோல் பங்க்கில் பொருத்தப்பட்டிருந்த சி.என்.ஜி. கேமராக்களில் இந்த விபத்து தொடர்பான காட்சிகள் பதிவாகியுள்ளன. குழாய் வெடித்து வாயு கசிவதுடன், மக்கள் பீதியுடன் ஓடும் காட்சிகளும் அந்தப் பதிவுகளில் பதிவாகியுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினரும், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர். சி.என்.ஜி. குழாய் திடீரென வெடித்ததற்கான உண்மையான காரணம் என்ன? பெட்ரோல் பங்க் நிர்வாகத்தின் தரப்பில் ஏதேனும் பாதுகாப்பு நெறிமுறைகள் மீறப்பட்டதா? அல்லது அலட்சியம் காரணமாக இந்த விபத்து நேர்ந்ததா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.