தமிழ்நாட்டில் நிலவி வரும் பருவமழை பற்றாக்குறை மற்றும் ‘எல் நினோ’வின் தீவிரத் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, நிலத்தடி நீரையும் ஆற்று நீரையும் மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். நடப்பு சம்பா சாகுபடி பருவத்தைக் காப்பாற்றும் நோக்கில், குறைந்த நீர் தேவைப்படும் மத்திய கால நெல் ரகங்களைப் பயிரிடவும், நேரடி நெல் விதைப்பு (Direct Seeding) முறையைப் பின்பற்றவும் வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

​பாசன நீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்தி, அனைத்து விவசாயிகளுக்கும் குறிப்பாகக் கால்வாய்களின் கடைமடைப் பகுதி வரை தண்ணீர் சென்றடைவதை அரசு உறுதி செய்யும் என்றும், இதன் மூலம் சம்பா சாகுபடியை முழுமையாக வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நீர்வளத்தைப் பங்கீடு செய்வதில் ஏற்படும் தடைகளை நீக்கி, விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் பாசன மேலாண்மையைக் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

​அதே நேரத்தில், ஆற்றுப் படுகைகள் மற்றும் கால்வாய்களில் சட்டவிரோதமாக மின்மோட்டார்கள் பொருத்தித் தண்ணீரை உறிஞ்சுவது அல்லது அனுமதியின்றி நீர் எடுப்பது போன்ற சட்டவிரோதச் செயல்கள் கண்டிப்பாகத் தடுக்கப்படும் எனக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீர் மேலாண்மையில் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.