நாகூர் தர்காவில் கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனக்கூடு ஊர்வலம் பெருவிமர்சையாக நடைபெற்றது. நாகூர் தர்காவில் கடந்த 24ஆம் தேதி 166வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த ஊர்வலத்தை, சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் மாவட்ட எஸ்பி ஜவஹர் போன்றோர் தொடங்கி வைத்தனர்.

முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நாகை யாஹுசைன் பள்ளித்தெரு வாசலில் இருந்து தொடங்கியது. சந்தனக்கூடு ஊர்வலத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பங்கேற்பதாக ஆட்டோவில் வந்து இறங்கிய இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பலத்த பாதுகாப்புடன் தர்காவுக்கு சென்றார். அங்கு சந்தனம் பூசும் நிகழ்வில் பங்கேற்று பின்னர் புறப்பட்டார்.