நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் தனது அசாத்தியமான அதிரடி ஆட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த விளையாட்டு உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி. இவருடைய இந்த அசுரத்தனமான வளர்ச்சிக்கு நாலாபுறமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வரும் வேளையில், பிரபல ஸ்போர்ட்ஸ் ஆங்கரான ரிதிமா வெளியிட்டுள்ள ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.
அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், “முன்பெல்லாம் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் தங்களை பீஹாரைச் சேர்ந்தவர்கள் என்று வெளியில் சொல்லிக்கொள்ளவே பல இளைஞர்கள் தயங்கிய ஒரு காலம் இருந்தது; ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது, வடகிழக்கு இந்திய இளைஞர்களின் இழந்த தன்னம்பிக்கை மீண்டும் கிடைத்துள்ளது” என்று தன் அனுபவங்களை உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
இதற்கு முன்பு கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனியின் அசாத்திய பாப்புலாரிட்டியும், ‘கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ போன்ற திரைப்படங்களும் இளைஞர்களிடம் ஒரு பெருமிதத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தோனியின் சொந்த ஊரான ராஞ்சியும், வாசிப்பூரும் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தின் கீழ் வருவதால் அந்தப் பாசிட்டிவ் இமேஜின் பெரும் பகுதி ஜார்கண்டிற்கே சென்றுவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தற்போது முழுமையாகப் பீஹார் மண்ணோடு தொடர்புடைய வைபவ் சூர்யவன்ஷியின் வருகை அந்த குறையைப் போக்கியுள்ளதுடன், அவர் வெறும் கிரிக்கெட் மைதானத்தோடு நின்றுவிடாமல் இன்றைய மாறிவரும் பீஹார் இளைஞர்களின் திறமை, அவர்களின் புதிய நம்பிக்கை மற்றும் எல்லையற்ற சாதனைகளின் அடையாளமாக, அந்த மாநிலத்தின் உண்மையான ‘புதிய ஐகானாக’ உருவெடுத்துள்ளார் என்று ரிதிமா பாராட்டியுள்ளார்.
பொறியியல் படிப்பை முடித்துவிட்டு கார்ப்பரேட் வேலையை உதறிவிட்டு ஸ்போர்ட்ஸ் ஆங்கரிங் துறைக்கு வந்த ரிதிமா, ஐபிஎல் மற்றும் ஐசிசி தொடர்களில் தனது தனித்துவமான ஆங்கரிங் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
