மகாராஷ்டிரா மாநிலம் கார்ஜத் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கொயினா எக்ஸ்பிரஸ் ரயிலின் சக்கரங்களில் இருந்து திடீரென அடர்ந்த புகை வெளியேறியதால், அங்குப் பயணிகள் மத்தியில் பெரும் பீதியும் கூச்சலும் ஏற்பட்டது. ரயிலின் சக்கரங்களில் இருந்து புகையானது மிக வேகமாக பரவி பிளாட்பாரம் மற்றும் பெட்டிகளுக்குள் சூழ்ந்ததால், அச்சமடைந்த பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடும் ரயிலில் இருந்தும், நின்று கொண்டிருந்த ரயிலில் இருந்தும் கீழே குதித்து அலறியடித்து ஓடினர்.

​இந்தச் சம்பவம் குறித்து மத்திய ரயில்வே மூத்த அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில், ரயிலின் பிரேக் திடீரென ஜாம் ஆனதே (Break Binding) இந்த அடர்ந்த புகைக்குக் காரணம் எனக் தெரிவித்துள்ளனர். பிரேக் பிளாக்குகள் சக்கர உராய்வை ஏற்படுத்தியதால் சக்கரங்களில் இருந்து அதிகப்படியான புகை கிளம்பியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாகச் செயல்பட்ட ரயில்வே நிர்வாகம், ரயிலைக் கார்ஜத் நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நிறுத்தி வைத்தது.

​சம்பவ இடத்திற்குத் தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து உடனடியாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். நல்லவேளையாகப் பயணிகள் யாருக்கும் எந்தவிதக் காயமும் ஏற்படாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, உரியத் தொழில்நுட்பச் சோதனைகளுக்குப் பிறகு கொயினா எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் பாதுகாப்பாகத் தனது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டது.