ராஜஸ்தான் மாநிலத்தில் ரெஹ்மான் (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஃபரிதா பானோ (29) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் குவைத் நாட்டிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு சமூக வலைத்தளத்தின் மூலம் அந்த நாட்டின் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது காலப்போக்கில் காதலாக மாறியதால் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் தனது மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். அதன்பின் அவர் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பாகிஸ்தான் பெண் ராஜஸ்தானில் உள்ள ரெஹ்மான் வீட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்று அங்கு தங்கி வந்துள்ளார்.

இதனால் ஃபரிதா பானோ காவல்நிலையத்துக்கு சென்று தனது கணவர் போன் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததுடன் மேலும் அவர் வரதட்சனை கேட்டு கொடுமை செய்ததாகவும் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரெஹ்மானை கைது செய்துள்ளனர்.