மேற்குவங்க மாநிலத்தில் உள்ள உஸ்தி நகரில் பாஜக கட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் கிடந்தது. அவரின் உடம்பில் காயங்கள் இருந்த நிலையில் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் பிரித்திவிராஜ் நஸ்கார் என்பது தெரியவந்தது. இவர் பாஜக கட்சியின் சமூக ஊடகப் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த கொலைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்று பாஜக குற்றம் சாட்டி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.