அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினிக்கு பிப்ரவரி 23-ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தோடு சேர்ந்து 51 ஏழை ஜோடிகளுக்கும் திருமணம் செய்து வைக்க ஆர்பி உதயகுமார் முடிவு செய்துள்ளார். திருமண ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஆர்பி உதயகுமார் தனக்கு நெருக்கமானவர்களுக்கு மற்றும் கட்சி வட்டாரங்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில் அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆர்பி உதயகுமார் அவருடைய மனைவி மற்றும் மகளுடன் சென்று நேரில் பத்திரிக்கை வைத்தார்.‌ இந்த பத்திரிகை விவகாரத்தில் திடீரென தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது ஆர்.பி உதயகுமார் அடித்த பத்திரிகையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பிக்கள் மற்றும் சசிகலாவுக்கு ஆதரவான பலரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக எடப்பாடியின் காதுகளுக்கு தகவல்கள் சென்றுள்ளது. இது எடப்பாடிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதை தெரிந்து கொண்ட ஆர்பி உதயகுமார் உடனடியாக பத்திரிகையில் சில மாற்றங்களை செய்து வேறு பத்திரிகையை அடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

பத்திரிக்கை விஷயத்தை முதலில் எடப்பாடி பழனிசாமி கவனிக்கவில்லை என்றும் இடையில் அதிமுக கட்சியில் இணைந்த மதுரையை சேர்ந்த ஒருவர்தான் இந்த விவகாரத்தை எடப்பாடியின் காதுகளுக்கு கொண்டு சென்றதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் ஆர்பி உதயகுமார் பத்திரிக்கையை மாற்றியதால் ஏற்கனவே இருக்கும் சலசலப்புகள் மத்தியில் இந்த விவகாரத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி அப்படியே அந்த விஷயத்தை மறந்து விட்டதாக கூறப்படுகிறது.