“நான் செலவு பண்ண ஆரம்பிச்சா, முடிக்கவே 2,740 வருஷம் ஆகும்ப்பா!” என்று உலகையே மிரள வைக்கும் வகையில், உலகின் முதல் ‘டிரில்லியனர்’ என்ற பிரம்மாண்டமான வரலாற்றுச் சாதனையை எட்டத் துடித்துக் கொண்டிருக்கிறார் எலான் மஸ்க்.

ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு (IPO) அறிவிப்பு நெருங்கி வரும் நிலையில், மஸ்க்கின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 8.15 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தற்போது 304 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் கூகுள் நிறுவனர் லாரி பேஜை விட, மூன்று மடங்கு அதிக சொத்துக்களுடன் உலக வரலாற்றிலேயே இணையற்ற செல்வந்தராக மஸ்க் உருவெடுத்துள்ளார்.

இது குறித்து வியப்பூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று, “எலான் மஸ்க் தினமும் 10 லட்சம் டாலர் வீதம் செலவு செய்தாலும் கூட, அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பான 1 டிரில்லியன் டாலரை முழுமையாகச் செலவிட அவருக்கு 2,740 ஆண்டுகள் தேவைப்படும்” என்று தெரிவித்துள்ளது.

சந்தை முடிவதற்குள் மஸ்க் இந்த டிரில்லியனர் அந்தஸ்தைப் பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மஸ்க்கின் இந்த அசுர வளர்ச்சி உலகப் பொருளாதாரத்தையே தற்போது திகைக்க வைத்துள்ளது.