மத்திய பிரதேசம் மாநிலம் ரீவா பகுதியில் அமைந்துள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க சுரேஷ் சென் என்ற நோயாளி, லிஃப்ட் பழுது காரணமாக அதன் நடுவே சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரத்தில் இருந்து விழுந்து தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவரை, ஊழியர்கள் சிலர் மேல் தளத்திற்கு மாற்றுவதற்காக ஸ்ட்ரெச்சருடன் லிஃப்ட்டில் ஏற்றியுள்ளனர். ஆனால், எதிர்பாராதவிதமாக லிஃப்ட் பழுதாகி நடுவழியில் நின்றதில் அவரது கழுத்து எலிவேட்டர் பகுதியில் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
रीवा के नेशनल अस्पताल में लिफ्ट गिरने से एक व्यक्ति की मौत हो गई! हद है छोटे शहरों में इनके।मेंटिनेंस को लेकर आपराधिक लापरवाही बरती जाती है pic.twitter.com/F53TLdCXKj
— Anurag Dwary (@Anurag_Dwary) August 31, 2026
உயிருக்குப் போராடிய நோயாளியைக் காப்பாற்ற முயலாமல் மருத்துவமனை ஊழியர்கள் அங்கிருந்து தலைமறைவானதாகக் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்த அதிர்ச்சித் தகவல்கள் மற்றும் உதவி கேட்டு கதறும் உறவினர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. மேலும், இதே லிஃப்ட்டில் சில நிமிடங்களுக்கு முன்பு மற்றொரு பெண்ணும் சிக்கித் தப்பியதாகவும், முறையான பராமரிப்பு இல்லாததே இந்த மரணத்திற்கு முக்கியக் காரணம் என்றும் ஆத்திரமடைந்த உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வெளியே திரண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் நிர்வாகத்திற்கு எதிராகக் கடுமையான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதற்கிடையில், பலியானவரின் உடல் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
