பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பிறகு தற்போது ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். நடிகை பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு முதல் முறையாக கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் முதல் முறையாக தமிழில் அறிமுகமானாலும் அடுத்தடுத்து பாலிவுட்டில் வாய்ப்புகள் வந்ததால் அதில் கவனம் செலுத்தினார்.
தற்போது இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் நடிகை பிரியங்கா சோப்ராவின் தாய் மது சோப்ரா தமிழன் படத்தில் நடிக்க மாட்டேன் என கூறி பிரியங்கா சோப்ரா அழுததாக கூறியுள்ளார். அதாவது அவர் உலக அழகி பட்டத்தை வென்ற போது மாடலிங்கில் கவனம் செலுத்த விரும்பியுள்ளார். இதனால்தான் அவர் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் அவருடைய தாயார் வற்புறுத்தியதால் தமிழன் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது மது சோப்ரா கொடுத்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.