உத்தரகாண்டின் டேராடூன் நகரில் மஞ்சேஷ் குமார் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய நீண்ட கால கூட்டாளி சஞ்சய் சிங் என்ற பாஜி பிளாட்டுகளை பிரித்து விற்பதற்காக, பாஜி வாங்கிய நிலம் தொடர்பாக இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நிலத்தில் 50% பங்கு வேண்டும் என்று மஞ்சேஷ் கேட்டுள்ளார். ஆனால் பாஜி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த மஞ்சேஷ் கூலிப்படையை வைத்து பாஜியை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக அர்ஜுன் குமார் (30) என்பவரை கூலிக்கு அமர்த்தியுள்ளார். ஆனால் அந்த நபர் பாஜியிடம் எல்லா விஷயத்தையும் கூறியுள்ளார்.
உடனே, பாஜி பதிலுக்கு 10 கோடி ரூபாயை அர்ஜுனிடம் கொடுத்து மஞ்சேஷ் கொலை செய்ய கூறியுள்ளார். பெரிய தொகை என்பதால் அர்ஜுனும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர் சச்சின் என்ற நண்பரின் வீட்டிற்கு சென்று, விருந்தில் பங்கேற்க மஞ்சேஷை அழைத்துள்ளனர். அவரும் வந்துள்ளார். அவருக்கு மது கொடுத்து, அவர் தன்னிலை மறந்த பின்பு மஞ்சேஷை கொலை செய்துள்ளனர். அங்கிருந்து தப்பி ஓடும்போது மஞ்சேஷின் தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் கார் சாவிகள் ஆகியவற்றை மற்றொரு கூட்டாளியான அப்சல் மாலிக்கிடம் கொடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். அதன் பின் குற்றவாளிகள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.