டி20 கிரிக்கெட்டின் தற்போதைய சாம்பியனான இந்திய அணி, முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. அயர்லாந்துக்கு எதிரான தொடரை 2-0 என இழந்ததைத் தொடர்ந்து, தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே இந்திய அணி பறிகொடுத்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது அணியின் வியூகங்கள் குறித்துப் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தத் தொடர் சொதப்பல் காரணமாக, அணியில் உள்ள சில முன்னணி வீரர்களின் இடத்திற்குப் ஆபத்து ஏற்பட்டுள்ளதோடு, தேர்வுக்குழுவினர் விரைவில் அணியில் அதிரடி மாற்றங்களைச் செய்யக் கூடும் எனத் தெரிகிறது.

இந்த அதிரடி நீக்கப் பட்டியலில் முதன்மையாக இருப்பது அணியின் துணை கேப்டன் திலக் வர்மாவின் பெயர் தான். துணை கேப்டன் என்ற பெரிய பொறுப்பு வழங்கப்பட்டதில் இருந்தே அவரது பேட்டிங் ஃபார்ம் முற்றிலும் மோசமடைந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 4 போட்டிகளில் அவர் வெறும் 51 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதோடு, மிடில் ஓவர்களில் ரன் ரேட்டை உயர்த்தவும் தவறிவிட்டார். இதனால், பெஞ்ச்சில் அமர வைக்கப்பட்டுள்ள சீனியர் வீரர் சஞ்சு சாம்சன் மீண்டும் ஆடும் லெவனுக்குள் வர வாய்ப்புள்ளது.

இவரைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் பர்பிள் கேப் வென்ற வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவின் சர்வதேச ஃபார்ம் மிக மோசமாக உள்ளது. 7 போட்டிகளில் 11.22 என்ற மிக அதிக எகானமியில் ரன்களை வாரி வழங்கியுள்ளதால், அவருக்குப் பதிலாக அசோக் சர்மா, யாஷ் தாக்கூர் போன்ற இளைஞர்களுக்கு ஜிம்பாப்வே தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பந்துவீச்சில் சிறப்பாக இருந்தாலும், லோயர் ஆர்டரில் பினிஷராகச் சொதப்பி வரும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக, ஐபிஎல் தொடரில் 175.55 ஸ்டிரைக் ரேட்டில் மிரட்டிய பஞ்சாப் கிங்ஸின் இளம் வீரர் சூர்யான்ஷ் ஷெட்ஜ் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது.