மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து திமுக சார்பில் ஆவடியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில் அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பாஜக தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருவதால் வேதனையுடன் இந்த கூட்டத்தை நடத்துகிறோம். தமிழ்நாட்டு மக்களுக்காக பட்ஜெட்டில் எதுவுமே அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் ஏதாவது புது பிரச்சனையை கிளப்பி வன்முறை செய்யலாமா அல்லது ஏதாவது கலவரம் செய்யலாமா. இல்லையெனில் வன்முறைக்கு வழி வகுக்கலாமா என்கிற விதத்தில் சிலர் செயல்படுகிறார்கள். பல்வேறு மதங்கள், ஜாதிகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்ட மக்களாக இருந்தாலும் தமிழர்கள் என்ற உணர்வோடு மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறர்கள்.

அவரவர் கடவுள் அவரவர் நம்பிக்கை. அவர்கள் அவர்களுக்கு என்று விருப்பு வெறுப்போடு வாழ்ந்து வருகிறார்கள். ஆன்மீகம் வேறு அரசியல் வேறு என்று பகுத்தறிந்து பிரித்துப் பார்க்கக் கூடிய மக்கள் வாழும் தமிழ்நாடு இது. ஆன்மீகத்தை அரசியலுக்கு பயன்படுத்துகிற தீய சக்திகளை நாம் எப்போதுமே ஏற்றுக் கொள்ள மாட்டோம். இவர்களை தமிழக மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதேபோன்று சில மதத்தினர் உணர்வுகளையும் மதிப்பவர்களை தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். என்னைக்குமே இது மத வெறியாக மாறாது. மேலும் இதனால்தான் பாஜக ஆளும் மாநிலங்களைப் போன்று வன்முறை கார்டாக இல்லாமல் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று கூறினார்